அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சாதாரண குழந்தைகளை விட இரண்டு மடங்கு கூடுதல் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று, மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள காயுகா மருத்துவ மையத்தில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டெரிகா – ஷான் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ‘ஷான் ஜூனியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை, பிறக்கும்போது சுமார் 5.9 கிலோ எடையுடன் இருந்தது.
பொதுவாகப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடை 3 கிலோவாக இருக்கும் நிலையில், இந்தக் குழந்தை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எடையுடன் பிறந்துள்ளது. இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இதுதான் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மூன்று குழந்தைகளுக்குத் தாயான டெரிகா இது குறித்துக் கூறுகையில், “எனக்கு பிறக்கப் போகும் குழந்தை சற்று பெரியதாக இருக்கும் என்று தெரியும், ஆனால் இந்த அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பிறந்த உடனேயே இந்தக் குழந்தைக்கு 3 முதல் 6 மாதக் குழந்தைகள் அணியும் உடைகளும், டயப்பர்களும் தான் சரியாக இருக்கிறது. நான் நேரடியாக மூன்று மாதக் குழந்தைக்குத் தாயானது போல உணர்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், அதே மருத்துவமனையில் அதே நாளில் ‘மார்கோட்’ என்ற பெண் குழந்தை வெறும் 1.8 கிலோ எடையில் பிறந்தது. இந்த இரு குழந்தைகளும் அருகருகே இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதற்கு இதுவே சாட்சி” என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி, வரலாற்றிலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை 1879-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் பதிவாகியுள்ளது. அந்தக் குழந்தை பிறக்கும்போது 9.98 கிலோ எடையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
