1917-ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தது.

அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும். இதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லாததால் 109 ஆண்டுகளாக இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வராமல் இருந்தது. சமீபத்தில் ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா தனது தந்தையின் பழைய கோப்புகளை ஆய்வு செய்தபோது, இதற்கான அசல் பத்திரங்கள் கிடைத்துள்ளன.

போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த ‘போர்க் கடன்வாங்கப்பட்டதாக அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.அன்றைய தங்கத்தின் மதிப்போடு ஒப்பிடும்போது, இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களைத் தொடும் என்று கணிக்கப்படுகிறது.

சர்வதேச சட்டப்படி ஒரு நாடு தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது கட்டாயம் என்பதால், பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

ஒரு காலத்தில் சீஹோர் மற்றும் போபால் பகுதிகளில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய இந்தக் குடும்பத்தினர், இன்றும் அப்பகுதியின் பெரும் நிலப்பரப்பிற்கு உரிமையாளர்களாக இருப்பதோடு விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களையும் செய்து வருகின்றனர்.