பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். தவெக-வின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரருமான தவெக-வின் விளையாட்டு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் மூத்த, தலைவர்களின் முன்னிலையில் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த இயக்கத்தோடுதான் என் பயணம் தொடரும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் தவெக-வில் இணைய வருகிறேனா என்று பலரும் கேட்கிறார்கள், பிரிந்திருந்தால் தானே மீண்டும் இணைவதற்கு? தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, ‘லியோ’ திரைப்பட வெற்றி விழாவில், நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து, ‘தமிழகத்தின் ஒரே மாற்றுத் திறவுகோல், நாளைய தீர்ப்பு விஜய் தான்’ என்று நான் அன்றே பிரகடனப்படுத்தியவன்” என்று குறிப்பிட்டார். சூழ்நிலை காரணமாக தற்போது தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், இன்னும் ஓரிரு நாள்களில் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், நாளைய தமிழகம், இன்றைய தமிழகம் என எப்போதும் தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், ஆண்டாண்டு காலம் வெற்றியை நோக்கி நடைபோடவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கப் போவதாகவும், இது தமிழக அரசியலில் நிச்சயமாக மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்றும் மன்சூர் அலிகான் நம்பிக்கையோடு தெரிவித்தார்.