“தமிழ்நாட்டோட தொழில் முதலீடு ஆந்திராவுக்குப் போயிடுச்சுன்னு சும்மா வெளியில நின்னு பேசிக்கிட்டு இருக்காதீங்க , தைரியம் இருந்தா இந்த கேள்வியைச் சட்டமன்றத்துக்குள்ள வந்து கேளுங்க !”
என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆவேசமாக விடுத்துள்ள நேரடிச் சவால் கோட்டை வட்டாரத்தில் மாபெரும் அரசியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்திற்கு வரவேண்டிய பல்லாயிரங்கோடி ரூபாய் மதிப்பிலான பெரும் தொழில் முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அண்மையில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கீர்த்தனா அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை வெறும் அரசியல் லாபத்திற்காகப் பொதுவெளியில் பேசாமல் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக எழுப்பத் தயாரா என டி.ஆர்.பி. ராஜாவுக்குக் கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சிகளின் எந்தவொரு விவாதத்திற்கும் தக்க ஆதாரங்களுடன் பதில் சொல்லத் தான் எப்போதும் தயாராகவே இருப்பதாகப் பிரகடனம் செய்தார்;
எந்த ஆட்சிக் காலத்தில், யாருடைய நிர்வாகக் குளறுபடியால் தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்குத் தப்பியோடின என்ற அசல் ஜாதகமே தன் கையில் இருப்பதாகவும் அமைச்சர் கீர்த்தனா எச்சரித்துள்ளதால், அறிவாலயத்திற்கும் தற்போதைய தவெக அரசுக்கும் இடையேயான அரசியல் போர்க்களம் உச்சக்கட்டத்தைக் எட்டியுள்ளது.
