உயர்பதவிகளை அடையப் பலரும் கடுமையாகப் போராடும் காலத்தில், தனது கனவை நனவாக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தனது பதவியைத் துறந்து மீண்டும் காவலராக மாறியுள்ள வினோதமான சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
வடகிழக்கு டெல்லியின் கராவல் நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் மனிஷ். இவர் தனது உயர் அதிகாரிகளுக்கு அளித்த விண்ணப்பத்தில், தான் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், தன்னை மீண்டும் கான்ஸ்டபிளாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வினோதக் கோரிக்கையைக் கண்டு உயர் அதிகாரிகள் தொடக்கத்தில் வியப்படைந்தனர்.
இவரது விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மனிஷ் மீது ஏதேனும் துறை சார்ந்த விசாரணையோ, குற்றவியல் வழக்குகளோ அல்லது ஊழல் புகார்களோ நிலுவையில் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அத்தகைய விவகாரங்கள் எதுவும் இல்லை என்பது உறுதியானதை அடுத்து, துணை ஆணையர் (DCP) அவரது கோரிக்கையை ஏற்று, அவரை மீண்டும் கான்ஸ்டபிளாக நியமித்து உத்தரவிட்டார்.
மனிஷ் முதலில் கான்ஸ்டபிளாகத் தனது பணியைத் தொடங்கி, பின்னர் துறை சார்ந்த தேர்வுகள் மூலம் சப்-இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றவர். இருப்பினும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்த பணிச்சுமை மற்றும் பொறுப்புகள் காரணமாகத் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் உணர்ந்துள்ளார்.
அவர் பெரிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதால், கான்ஸ்டபிள் பணியில் இருந்தால் மட்டுமே அதற்கான போதிய நேரம் கிடைக்கும் என அவர் நம்புகிறார். தனது இலக்கை அடையப் பதவி, அந்தஸ்து ஆகியவற்றை விட நேரமே முக்கியம் எனக் கருதி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மனிஷிடம் கருத்து கேட்க முயன்றபோது, அவர் பேச மறுத்துவிட்டார். லட்சியத்திற்காக உயர்பதவியைத் துறந்த இந்தக் காவலரின் செயல் டெல்லி காவல்துறையினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
