மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள தலேகான் பகுதியில், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 35 வயது பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலேகான் எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரதிபா சங்கர் (35). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே சனிக்கிழமை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பிரதிபா, தனது வீட்டின் 8-வது மாடி பால்கனியிலிருந்து திடீரென கீழே குதித்துள்ளார்.

பிரதிபா கீழே குதித்தபோது, எதிர்பாராதவிதமாக பால்கனியின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அப்போது அங்கிருந்த அவரது சிறு வயது மகன், தனது தாயின் கையைப் பிடித்து மேலே தூக்கக் கண்ணீருடன் போராடினான். இந்த இதயத்தை பிளக்கும் காட்சியை அக்கம் பக்கத்தினர் செல்போனில் படம்பிடித்துள்ளனர்.

கீழே இருந்த மக்கள் சத்தம் போட்டு அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், சில நொடிகளிலேயே பிடி நழுவியதால், 8-வது மாடியிலிருந்து பிரதிபா கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தலேகான் போலீசார், பிரதிபாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் கண்முன்னே தாய் உயிரிழந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.