மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில், மாற்றுத்திறனாளி ஈ-ரிக்ஷா ஓட்டுநரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 37 நாட்களாக மர்மமாக இருந்த இந்த கொலை வழக்கின் பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் 30-ஆம் தேதி, குல்டியா கிராமத்தைச் சேர்ந்த சோம்பால் என்பவரது கோதுமை வயலில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அவர் மாற்றுத்திறனாளி ஈ-ரிக்ஷா ஓட்டுநர் சந்திரபிரகாஷ் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது தந்தை வீர்பால் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிங்கு (என்கிற முகேஷ்) என்பவரது மனைவி சிவானிக்கும், சந்திரபிரகாஷுக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், சந்திரபிரகாஷைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று சந்திரபிரகாஷை மது அருந்த அழைத்த முகேஷ், அங்கு வைத்து தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முகேஷ், கயிற்றால் சந்திரபிரகாஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வயலில் வீசிவிட்டுத் தப்பியோடினார்.
கொலைக்கு பிறகு சந்திரபிரகாஷின் ஈ-ரிக்ஷாவைத் திருடிக்கொண்டு தப்பிய முகேஷ், பரேலி வழியாகச் சென்று தாத்ரி பகுதியில் தலைமறைவானார். இந்நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் திங்கள்கிழமை இரவு சர்தார் நகர் அருகே பதுங்கியிருந்த முகேஷை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட ஈ-ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்காதல் சந்தேகத்தால் மாற்றுத்திறனாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
