டெல்லி தேசிய தலைநகர் பகுதியிலுள்ள அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதற்கு பிராணி விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றினார். அதன் பின்னர், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு, பதிலாக அவற்றைப் பிடித்து கருத்தடை அறுவைச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்தது. தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகளில் ஒருவரான விக்ரம் நாத், சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய சட்ட சேவை ஆணைய மாநாட்டில் கலந்து கொண்டார்.
அங்கு பேசிய அவர், “நான் நீண்ட காலமாக சிறிய வழக்குகள் மூலம் சட்டத்துறையில் அறியப்பட்டிருந்தாலும், இந்த தெருநாய் வழக்கு எனக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுத்தந்தது. இதற்காக தெருநாய்களுக்கும், தலைமை நீதிபதி இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார்.
வரும் 2027ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக விக்ரம் நாத் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெருநாய்கள் தொடர்பான இந்த வழக்கின் மூலம் அவர் பெற்ற உலகளாவிய கவனம், அவரது நீதித்துறை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கு தீர்ப்புகள், தெருநாய்களைப் பற்றிய சமூக பார்வையையும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் நீதிமன்றத்தின் பங்களிப்பையும் வெளிப்படுத்துகிறது.
