மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த பக்தி ஜிதேந்திர மாயேகர் (26) கடந்த 17ஆம் தேதி நண்பரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறி வீடு விட்டு வெளியேறினார்.

ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். தோழிகளிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இறுதியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார், அவரது செல்போன் சிக்னலை அடிப்படையாக கொண்டு கண்டாலா பகுதியைத் துல்லியமாக கண்டறிந்தனர்.

இதையடுத்து நடந்த ஆழமான விசாரணையில், பக்தி ஜிதேந்திர மாயேகர் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் என்ற இளைஞருடன் தீவிரமாகக் காதலித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் வகையில் தனது காதலியைத் தான் கொலை செய்ததாக துர்வாஸ் ஒப்புக்கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு துர்வாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டது அவர்களுக்கிடையே கடும் தகராறு ஏற்பட காரணமாக இருந்தது என்றும், சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் ஆவேசமடைந்து பக்தியை அடித்து கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்மீது, உடலை மறைக்க தனது கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார் மற்றும் சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகியோருடன் சேர்ந்து, அம்பாகாட் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியதாகவும் துர்வாஸ் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். உடனடியாக அம்பாகாட் பகுதிக்கு சென்ற போலீசார், பக்தி ஜிதேந்திர மாயேகரின் உடலை கைப்பற்றினர். இந்த தகவல் வெளிவந்ததும், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், போலீசார் பக்தியின் காதலனான துர்வாஸ் தர்ஷன்பாட்டீலையும், அவரது கூட்டாளிகள் விஸ்வாஸ் விஜய் பவார் மற்றும் சுசாந்த் சாந்தாராம் நரால்கரையும் கைது செய்தனர். தற்போது இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் சிக்கலால் தொடங்கிய தகராறு உயிரிழப்பில் முடிந்துள்ள இந்த சம்பவம், ரத்தினகிரி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சி மற்றும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.