நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, சபையின் கண்ணியம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய், “இந்தத் தீர்மானம் சபாநாயகர் மீதான தனிப்பட்ட அதிருப்தியால் கொண்டு வரப்படவில்லை; நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேச முற்பட்டபோது, சபாநாயகரும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சுமார் 20 முறை குறுக்கிட்டனர். முக்கியமான மக்கள் பிரச்சினைகளை அவையில் விவாதிக்க விடாமல் தடுத்தது திட்டமிட்ட செயல்” என்று குற்றம்சாட்டினார்.
இதற்குக் குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “விவாதம் சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்ததாக மட்டுமே இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மற்ற விஷயங்களைப் பேசி அவையைத் திசைதிருப்பக் கூடாது” என்றார். இதற்குப் பதிலளித்த கோகாய், “எதிர்காலத்தில் நாடாளுமன்றப் பதிவுகளை ஆய்வு செய்தால், எதிர்க்கட்சிகளின் உரைகளுக்குத் தொடர் இடையூறு விளைவித்த அமைச்சராக கிரண் ரிஜிஜுவே முதலிடத்தில் இருப்பார் என்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு சபையில் அடிக்கடி தலையிட்டதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இவ்வளவு பொறுப்பற்ற முறையில் செயல்படும் எதிர்க்கட்சியை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை” என்று விமர்சித்தார். மேலும் சபாநாயகரின் நடுநிலைமை மற்றும் ஆளுங்கட்சியின் தலையீடு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகாரும், அதற்கு அரசு தரப்பு அளித்த பதிலடியும் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
