இந்தியாவையே உலுக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாகக் கோமா நிலையில், வெறும் மூச்சு மட்டுமே விட்டுக்கொண்டு உயிரற்ற உடலாகக் கிடக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணாவுக்கு ‘பॅசிவ் யூதனேசியா’ (Passive Euthanasia) எனப்படும் கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாட்டில் இத்தகைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது. “இனி ஹரிஷ் மீண்டு வர வாய்ப்பே இல்லை.. அவரை இப்படி வைத்திருப்பது குடும்பத்தினரின் துயரத்தை அதிகரிப்பதே” என நீதிபதிகள் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

​2013-ம் ஆண்டு வரை துடிப்பான பாடிபில்டராகவும், சிவில் இன்ஜினியரிங் மாணவராகவும் இருந்த ஹரிஷின் வாழ்க்கையை, அந்த ஒரு விபத்து சல்லி சல்லியாகச் சிதைத்தது. தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில், ஹரிஷின் மூளை நரம்புகள் செயலிழந்து போயின. அன்று முதல் இன்று வரை 13 வருடங்களாகப் படுக்கையிலேயே கிடக்கும் மகனைப் பார்க்க முடியாமல், “எங்கள் மகனை நிம்மதியாகச் சாக விடுங்கள்” எனப் பெற்றோர் நீதிமன்றத்தில் கதறினர். 100% ஊனத்துடன் எந்த உணர்வும் இல்லாமல் வெறும் சதைக் கோளமாகக் கிடக்கும் ஹரிஷின் போராட்டத்திற்கு இன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு முடிவு கட்டியுள்ளது.