ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களிடையே மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவுள்ளது. பொதுவாக ஆண்ட்ராய்டு போன்களில் திரையை அணைத்து வைத்திருந்தாலும் பின்னணியில் இருப்பிடச் சேவைகள் மற்றும் இசை போன்றவற்றுக்காக மையச் செயலகம் இயங்கிக் கொண்டே இருக்கும்.

இதற்காகப் பயன்படுத்தப்படும் வேக் லாக் என்ற தொழில்நுட்பத்தைச் சில செயலிகள் தவறாகப் பயன்படுத்தி அதிகப்படியான மின்சாரத்தைச் செலவிடுகின்றன. இதனால் போன்களைப் பயன்படுத்தாத நேரத்திலும் பேட்டரி அளவு குறைந்து விடுவது பலருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு அதிகப்படியான பேட்டரி திறனைப் பயன்படுத்தும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன்பே கண்டறியும் வசதியைப் பிளே ஸ்டோரில் கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த 28 நாட்களில் எந்தெந்தச் செயலிகள் 5 சதவீதத்திற்கும் மேலாக இந்த வேக் லாக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பேட்டரி திறனை உறிஞ்சுகின்றனவோ அவை அனைத்தும் இனி பிளே ஸ்டோரில் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டப்படும்.

மேலும் அத்தகைய செயலிகள் பரிந்துரைப் பட்டியலிலிருந்தும் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் பயனாளர்கள் தங்களின் போன்களில் பேட்டரி ஆயுளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதுடன் தரமான செயலிகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும் வழிவகை ஏற்படும்.