தேமுதிக பலத்தை மற்ற கட்சிகள் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாகப் பேசினார்.  அவர் பேசியதாவது,

“தேமுதிகவில் இன்றும் 20 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (Ex-MLAs) உள்ளனர் என்பதை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம் இது. எங்களது செல்வாக்கு இன்றும் குறையவில்லை.”

“கூட்டணியில் எங்களுக்குரிய கௌரவமான எண்ணிக்கையில் கூடுதல் தொகுதிகளைக் கேட்பது எங்களது உரிமை. அதை முறையாக வழங்குவது கூட்டணித் தலைமையின் கடமையாகும். எங்களது பலத்திற்கு ஏற்ற அங்கீகாரத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

“நாங்கள் முதல்வர் பதவியைக் கேட்கவில்லை; மாறாக, உங்களை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்காகத்தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். கூட்டணி தர்மத்தை மதித்து, எங்களது உழைப்பிற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். எங்களுடைய பலத்தை உணர்ந்து செயல்படுபவர்களுடன்தான் எங்களது பயணம் தொடரும்,” என விஜய பிரபாகரன் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக தனது அரசியல் நிலைப்பாட்டை இப்போதே தீவிரப்படுத்தியுள்ளதை இந்த உரை உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.