தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே எழுச்சியுரை ஆற்றினார்.
அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு, “நமது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் விஜய் அவர்கள் தமிழக முதல்வராக அரியணையில் அமர்வது உறுதி. அந்த லட்சியத்தை அடைய கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இப்போதிலிருந்தே மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் உரிய பதவிகள் வழங்கப்படும் என்பதில் தலைவர் உறுதியாக உள்ளார்.”
தேர்தல் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “தேர்தல் நாளில் பூத் ஏஜெண்டுகள் (வாக்குச்சாவடி முகவர்கள்) மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாக்குப்பதிவு முடியும் வரை கடைசி நிமிடம் வரை முகவர்கள் அங்கேயே இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், ஆளுங்கட்சியினரோ அல்லது எதிர்க்கட்சியினரோ கள்ள ஓட்டுப் போடுவதை நாம் துணிச்சலுடன் தடுத்து நிறுத்த வேண்டும். வாக்குகளைப் பிரித்துப்போட யாரையும் அனுமதிக்கக் கூடாது,” என அறிவுறுத்தினார்.
“தலைவர் விஜய்யின் பேச்சைக் கேட்க தமிழகத்தில் 5 கோடி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் நம் தலைவருக்கு ஆதரவாக விசில் அடித்து ஆரவாரம் செய்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் களம் நம்மைப் பற்றித்தான் பேசும். காலியாக உள்ள கட்சிப் பதவிகள் விரைவில் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பப்படும்,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மேலும் அதே நேரத்தில் நடிகர் விஜய் ஆல் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியும் எனவும், ஆனால் சட்டப்படி ஒருவர் 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என கூறினார். ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். அப்படி இருக்கையில் புஸ்ஸி ஆனந்த் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
