தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும், 11 முறை தோல்வியைத் தழுவிய எடப்பாடி பழனிசாமிக்கு 2026-ஆம் ஆண்டு 12-வது தோல்வியைப் பரிசாக அளிக்கும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதிமுக-வின் ஒரு பகுதி இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை நாங்கள் ஒரு வலுவான கூட்டணியாகப் பார்க்கவில்லை. அது ஒரு பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த அணியில் இணைந்தாலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை (இந்தியா கூட்டணி) யாராலும் வீழ்த்த முடியாது. மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். வெறும் கூட்டத்தைக் கூட்டி வெற்றி பெற்றுவிட முடியாது.
தமிழக மக்களின் மனநிலையை ஒவ்வொரு கருத்துக்கணிப்பு வாயிலாகவும் நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். பிரதமர் மோடி தமிழகத்தைப் பற்றி என்னதான் ஆயிரம் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், அது தேர்தலில் எதிரொலிக்காது. பாஜாக ஆளும் மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றங்கள் அதிகம் என்று மோடியால் நிரூபிக்க முடியுமா?
எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்த டி.டி.வி. தினகரன், தற்போது அவருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடானது. தேசிய ஜனநாயகக் கூட்டணி காட்டும் கூட்டத்தை, திமுக-வின் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே எங்களால் முறியடிக்க முடியும். 60 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் தருவோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய எடப்பாடியை மக்கள் நம்ப மாட்டார்கள். மாறாக, 1 கோடியே 32 லட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் முதல்வர் ஸ்டாலினையே மக்கள் நம்புகிறார்கள்.
எங்களுக்கு எதிரிகளே இல்லை என்று நாங்கள் சொல்லமாட்டோம். ஆனால், எங்களோடு மோதும் அளவுக்கு அவர்கள் வலிமையாக இல்லை. திமுக-வை நம்பி வருபவர்கள் ஒருபோதும் கெட்டுப்போக மாட்டார்கள். எங்களுடைய வெற்றிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கிவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக-வே மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
