தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். சுமார் 38 நாட்களுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றுப் போராட்டத்தை உதாரணமாகக் கொண்டு தனது உரையைத் தொடங்கினார்.
இந்நிலையில் அந்நிய சக்திகளால் அபகரிக்கப்பட்ட நாட்டை மீட்டெடுக்க வேலுநாச்சியார் எவ்வாறு ஒரு படையைத் திரட்டிப் போராடினாரோ, அதேபோல தற்போதைய அரசியல் சூழலில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயார் நிலையில் இருப்பதாக அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய விஜய், “நட்பு சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகப் படை தனியாளாக நின்று வெற்றி பெறும்” எனத் தீர்க்கமாகத் தெரிவித்தார்.
இது குறிப்பாக, கட்சியில் உள்ள பெண்களின் பங்களிப்பையும் அவர்களின் தைரியத்தையும் வெகுவாகப் பாராட்டிய அவர், இத்தனை வலுவான ஒரு படை தன்னுடன் இருக்கும்போது தமிழ்நாட்டை மீட்டெடுப்பது கடினமான காரியம் அல்ல என்றும் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த ‘தனித்து நிற்கும்’ அறைகூவல், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
