தமிழ்நாட்டில் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கலந்துகொண்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

அனைத்துக் கட்சிகளுக்கும் மாணவர் அமைப்புகள் இயங்கிவரும் சூழலில், இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து சுற்றறிக்கை மூலம் முடக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று சண்முகம் ஆவேசமாகத் தெரிவித்தார். நாங்கள் ஒன்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்போ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்போ அல்ல என்றும், அடக்குமுறைகளைத் தாண்டி பல வரலாறுகளைக் கண்ட இயக்கம் இது என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போதைய TVK  அரசு அமைவதற்கும் தொடர்ந்து நீடிப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முழுமையான ஆதரவைத் தந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசியல் அடிப்படை கூடத் தெரியாமல் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் சாய்குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதே எங்களின் ஒற்றை இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாணவர்களின் நலனுக்காகப் போராடும் மாணவர் அமைப்புகளைக் காவல்துறையைக் கொண்டு மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்ற அவர், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கைகள் இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், “தற்போது தமிழ்நாட்டில் அரசிடம் அதிகாரிகள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இயங்குகிறதா? இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.