அமெரிக்காவுக்கும் அதன் அண்டை நாடான கனடாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளன. நீண்ட காலமாகவே நீடித்து வந்த பனிப்போர், தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் மிகப்பெரிய பொருளாதார மோதல் வெடித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் முறிந்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க நிர்வாகம் கனடாவின் மீது கடுமையான வர்த்தக நடவடிக்கையை எடுத்தது. கனடாவிலிருந்து இறக்குமதியாகும் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா அதிரடியாக விதித்தது. இது கனடாவின் ஒட்டுமொத்த வருடாந்திர ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இந்தப்பட்டியலில் மரத்தாலான சிறு உபகரணங்கள், மருத்துவக் கருவிகள், மற்றும் பல முக்கிய தொழிற்துறைப் பொருட்கள் அடங்கும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நாம் போர்க்களத்தில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம், இப்போது நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு டாலருக்கு டாலர் என்ற கணக்கில் பதிலடி வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

கனடா அறிவித்துள்ள இந்தச் சுங்கவரியானது பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அமெரிக்கப் பொருட்களின் மீது பாய்கிறது.

  • பால் பொருட்கள்

  • ஸ்டீல் மற்றும் இரும்புப் பொருட்கள்

  • வீட்டு உபயோகப் பொருட்கள்

  • விவசாய இயந்திரங்கள்

  • எலக்ட்ரானிக் சாதனங்கள்

  • காகிதம் மற்றும் கூழ் தொடர்பான பொருட்கள்

22 நிமிடங்கள் நீடித்த தனது உரையில், பிரதமர் கார்னி அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள நிரந்தர மாற்றத்தை வெளிப்படையாகப் பேசினார். “அமெரிக்கா மாறிவிட்டது என்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே புரிந்துகொண்டோம். அவர்களின் சில கையெழுத்துகள் பென்சிலால் எழுதப்பட்டவை என்பதை இப்போது உணர்கிறோம். நாம் பழைய உறவுகளுக்குத் திரும்பப் போவதில்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அமெரிக்கா மிகவும் அதிகமான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், ஆனால் மிகக் குறைவான சலுகைகளையே வழங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கனடாவின் இறையாண்மையைப் பலவீனப்படுத்தும் அல்லது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யும் உரிமையை முடக்கும் எந்தவொரு நிபந்தனையும் ஏற்புடையதல்ல என்பதில்  உறுதியாக உள்ளது.

மறுபுறம், பேச்சுவார்த்தை முறிவுக்குக் கனடாதான் முழுக்காரணம் என்று அமெரிக்கத் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. மரப் பொருட்கள், ஸ்டீல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற முக்கியத் துறைகளில் கனடாவுக்குப் பல சலுகைகளை வழங்கியதாகவும், ஆனால் அவர்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டதாகவும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான மேஜையில் இருந்த இரு நாடுகளும் இப்போது பொருளாதாரப் போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று மோதத் தொடங்கியிருப்பது உலகளாவிய சந்தைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.