இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில், பிரிஸ்டல் சிட்டி அணியின் இளம் வீரர் டோம் பல்லார்ட் அடித்த கோல் ஒன்று தற்போது இணையத்தில் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. எதிரணி வீரர்களைப் பார்த்து வியக்க வைத்த இந்த விசித்திரமான கோல், புகழ்பெற்ற ‘புஸ்காஸ் விருதுக்கு’ தகுதியான ஒன்று என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
பிரிஸ்டல் சிட்டி மற்றும் பர்மிங்காம் சிட்டி அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான சாம்பியன்ஷிப் கால்பந்துப் போட்டி பர்மிங்காமின் செயின்ட் ஆண்ட்ரூஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தை நெருங்கியபோது, 85-வது நிமிடத்தில் பிரிஸ்டல் சிட்டி அணிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
RIDICULOUS FINISH! 😮💨
The perfect start to life in the #SkyBetChampionship for Dom Ballard.#EFL | @BristolCity pic.twitter.com/iszgVg30q5
— Sky Bet Championship (@SkyBetChamp) August 22, 2026
மறுமுனையில் இருந்து வந்த பந்தை நோக்கி ஓடிவந்த 21 வயதான இளம் வீரர் டோம் பல்லார்ட், கோல் கம்பத்திற்கு முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டு, தனது வலது காலால் மிகவும் லாவகமாகப் பந்தைத் பின்னோக்கி எட்டி உதைத்தார். எதிர்பாராத இந்தத் தந்திரமான ஷாட், நேராக வலையின் மேல் மூலையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தது. பர்மிங்காம் அணியின் கோல்கீப்பர் எங்கு திரும்புகிறோம் என்று யோசிப்பதற்குள் பந்து வலைக்குள் சென்றுவிட்டது.
இந்தத் துல்லியமான மற்றும் அபாரமான கோலைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்களும், சமூக வலைதளங்களில் வீடியோவைப் பார்த்தவர்களும் உறைந்துபோயினர். பலரும் இது இந்த ஆண்டின் ‘சிறந்த கோல்’ மற்றும் புஸ்காஸ் விருதுக்குரியது என்று சிலாகித்து வருகின்றனர். லேடன் ஓரியண்ட் அணியிலிருந்து இந்த மாதம்தான் பிரிஸ்டல் சிட்டிக்கு மாறிய பல்லார்ட், தனது புதிய அணிக்காக அடித்த முதல் போட்டி கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தப் போட்டியின் முடிவு பிரிஸ்டல் சிட்டிக்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆட்டத்தின் கூடுதல் நேரமான 95-வது நிமிடத்தில் பர்மிங்காம் அணியின் மாற்று வீரர் டெமரை கிரே ஒரு கோல் அடித்து சமன் செய்ததால், ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. வெற்றியைக் கடைசி நேரத்தில் நழுவவிட்டாலும், டோம் பல்லார்ட்டின் அந்த மிரட்டலான கோல்தான் உலகெங்கிலும் உள்ள ஃபுட்பால் ரசிகர்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
