தமிழக அரசியல் களத்தில் நீட் விவகாரம், மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் கூட்டணிக் கட்சியான தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களின் பேச்சுகள் என பல்வேறு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம், கூட்டணிக் கட்சியின் மனநிலை குறித்த வெளிப்படையான கருத்து என அவரது பேட்டி அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த மாணிக்கம் தாகூர், “எடப்பாடி பழனிசாமியின் வயதுக்கு மரியாதை கொடுத்து அன்பாகவே சொல்கிறேன். அவர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்திற்குள் ‘நீட்’ தேர்வு நுழைந்தது; அப்போதுதான் ஒரு மாணவியின் தற்கொலையும் நிகழ்ந்தது. 2019 தேர்தலுக்கு முன்பாகவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடமும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் அவர் தைரியமாக நிபந்தனை விதித்திருக்கலாம். ஆனால், அந்தத் துணிச்சல் அவருக்குக் கிடையாது. இப்போது பழியை மட்டும் காங்கிரஸ் மீது போடுகிறார்,” என்று சாடினார்.
மேலும், “ராகுல் காந்தி பிரதமராகப் பதவியேற்றதும் போடும் முதல் கையெழுத்துகளில் ஒன்று, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பதாகத்தான் இருக்கும்,” என அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த தவெக-வின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ‘விஜய் ஊழலற்ற ஆட்சியைத் தருகிறார், அவர்தான் வருங்கால பிரதமர்’ எனக் கூறியிருந்தார். அதேபோல, அமைச்சர் ஸ்ரீநாத் ‘நாளைக்கே டெல்லி கூட தளபதியுடையதாக ஆகலாம்’ என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், “காங்கிரஸ் கட்சியின் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர் ஆகியுள்ளார் என்பது தவெக அமைச்சர்களுக்கும் நன்றாகவே தெரியும். முதலமைச்சர் விஜய் பிரதமராக வேண்டும் என அவர்கள் பேசுவதைப் பார்க்கும்போது, அவர்கள் இன்னும் ‘ரசிகர் மன்ற’ மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதை மாற்றுவது கடினம்,” என்று சுருக்கெனப் பதிலளித்தார். அதோடு தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு தற்போது எம்பிக்கள் கிடையாது என்பதால் அவர்களால் இந்தியா கூட்டணியில் இணைய முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ‘அணை கட்டினால் தமிழகத்திற்குத் தண்ணீர் வந்துவிடும்’ என்று சொல்வதெல்லாம் வெறும் கதை; அதை நம்பக் கூடாது. மேகதாது அணைத் திட்டம் தமிழகத்திற்கு விரோதமானது, அதை காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
