திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தைவான் நாட்டில் உயர் கல்வி பயின்றபோது பழகிய வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்வதாக ஏமாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (32). எம்.எஸ்சி பட்டதாரியான இவர், தத்துவவியல் துறையில் முனைவர் (Ph.D) பட்டம் பெறுவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு தைவான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள டேட்டிங் செயலி மூலம் ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய விரும்பிய ஜோயிங்யிங்குக்கு, ஜெகதீசுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றதும் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் உறுதியளித்துள்ளார். அவரது பேச்சினை நம்பிய அந்தப் பெண், ஜெகதீஷின் படிப்புச் செலவுகள், தங்கும் வசதிகள் மற்றும் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுள்ளார். ஜோயிங்யிங் தனது பெற்றோரிடம் ஜெகதீஷை அறிமுகப்படுத்தியபோது அவர்கள் எதிர்த்துள்ளனர்; இதனால் இருவரும் தைவானில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தனது முனைவர் படிப்பை வெற்றிகரமாக முடித்த ஜெகதீஷ், இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் பேசிவிட்டு வந்து திருமணம் செய்வதாகக் கூறி தைவானில் இருந்து ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆரம்பத்தில் செல்போனில் பேசி வந்த அவர், போகப் போக ஜோயிங்யிங்குடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வெளிநாட்டுப் பெண், ஆன்லைன் மூலம் உடுமலை பெண் வழக்கறிஞர் சரஸ்வதியைத் தொடர்புகொண்டு சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுள்ளார்.

வழக்கறிஞரின் அறிவுரைப்படி, தைவானில் இருந்து விமானம் மூலம் கோவை வந்திறங்கிய ஜோயிங்யிங், அங்கிருந்து கார் மூலம் நேராக உடுமலைக்குச் சென்றுள்ளார். பின்னர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க அவர் புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியதுடன், தைவானில் தன்னைத் தாக்கியதாகவும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெகதீசுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களையும் ஆதாரங்களாக போலீசாரிடம் சமர்ப்பித்தார்.

வெளிநாட்டுப் பெண்ணின் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜெகதீஷ் அந்தப் பெண்ணை ஏமாற்றியதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜெகதீஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட ஜோயிங்யிங் மருத்துவப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காதலித்து ஏமாற்றிய காதலன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.