பீகார் மாநிலத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் நடந்துகேட்கும் நிகழ்வு, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டிய இடமே, மனிதாபிமானமற்ற செயலுக்குக் களமாய் மாறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரபங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஒரு ஆதரவற்ற மற்றும் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக வந்தடைந்தார். மருத்துவமனை வாயிலுக்கு வந்த அந்த முதியவரால் தன் பெயரைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை; அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். ஆனால், அவரை ஸ்டெர்சரில் அழைத்துச் செல்ல வேண்டிய மருத்துவமனைப் பாதுகாவலர் செய்த காரியம் நெஞ்சை உறைய வைக்கிறது.

முதியவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவரை தரையில் ஈவிரக்கமின்றி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவியது. ஆகஸ்ட் 21 அன்று நடந்த இந்தச் சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தை மட்டுமல்லாமல், அதைப் பார்த்த அனைவரையும் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்ததும், DMCH மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரா உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதியவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடைந்த காலுக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு, பிளாஸ்டர் போடப்பட்டது. தற்போது அவருக்குத் தேவையான உணவு, உடைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தன்னைப் பற்றி அதிகம் பேச முடியாத அந்த முதியவர், தான் ஜான்ஜார்பூரைச் சேர்ந்தவர் என்று  கூறியுள்ளார். அவரது சொந்த ஊரைக் கண்டறியவும், குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளவும் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையின் உதவியை நாடியுள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட அந்தப் பாதுகாவலரை உடனடியாகத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, “இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது” என்று கடுமையாகக் கண்டித்துள்ள அவர், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு மருத்துவமனை மேலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.