குருகிராம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தாங்கள் மேற்கொண்ட ஐவிஎஃப் சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குத் தங்களோடு எந்த உயிரியல் தொடர்பும் இல்லை என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.

குழந்தைகளின் உடல் தோற்றத்தில் மாற்றம் தெரிந்ததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர்கள் டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளனர். அதன் முடிவுகள், தாங்கள் வளர்க்கும் குழந்தைகள் தங்களுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியது.

ஐவிஎஃப் மையத்தில் கரு மாற்றத்தின் போது தவறு நடந்திருக்கலாம் அல்லது குழந்தைகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அந்தத் தம்பதியினர், இது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்தை நாடியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தத் துயரமான நிகழ்வு குறித்துப் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தாமதம் செய்ததால், தற்போது அந்தத் தம்பதியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவமனை ஆவணங்களைச் கைப்பற்றுவதில் சுணக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இத்தகைய சிகிச்சை முறைகளில் இருக்க வேண்டிய கட்டாயமான பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு வழிமுறைகள் இந்த மருத்துவமனையில் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

இதேபோன்ற மற்றொரு வழக்கில் முன்னதாக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்ட சூழலில், தற்போதைய இந்த அதிர்ச்சிகரமான வழக்கு ஐவிஎஃப் சிகிச்சை பெறும் பலரிடையே பெரும் அச்சத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.