தமிழ் சினிமாவின் ‘நவரச நாயகன்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மூத்த நடிகர் கார்த்திக் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாகப் பரவி வரும் வதந்திகளுக்கு அவரது மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக் உருக்கமான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.
தந்தையின் உடல்நிலை குறித்த தவறான தகவல்களுக்கும், விமர்சனங்களுக்கும் அவர் வருத்தம் தெரிவித்து அளித்திருக்கும் பேட்டி தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ‘மௌன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கார்த்திக்.
இவரது மகன் கெளதம் கார்த்திக்கும் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகராகத் திகழ்கிறார். சமீபத்தில் ஒரு இயக்குநர் அளித்த பேட்டியின் தொடர்ச்சியாக, கார்த்திக் குறித்த எதிர்மறையான பிம்பங்கள் வலைதளங்களில் கட்டமைக்கப்பட்டன.
இது குறித்து பேசிய கெளதம், “தந்தை குறித்துப் பொதுவெளியில் பேசப்படும் விமர்சனங்கள் ஒரு மகனாகப் பார்க்கும்போது வருத்தத்தை அளிக்கிறது. அப்போது இருந்த சூழ்நிலைகள் வேறு; இப்போது இருக்கும் சூழல்கள் வேறு. பிரச்சினைகள் இருப்பின் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம். பொதுத்தளத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நடிகர் கார்த்திக் வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, அவருக்கு உடல்நிலை சரியில்லை எனப் பலவிதமான வதந்திகள் பரவத் தொடங்கின. இது குறித்து தெளிவுபடுத்திய கெளதம் கார்த்திக், “அப்பாவுக்கு வயதாகிறது. அதனால் வருடாந்திர மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வது வழக்கம்.
படிக்கட்டு ஏறச் சிரமப்பட்டதால் மட்டுமே அன்று வீல்சேரில் அழைத்துச் சென்றோம். அதனைப் படம் எடுத்து, அவருக்கு வேறு ஏதோ பெரிய பிரச்சினை என்று வதந்தியைப் பரப்புகிறார்கள். என் அப்பா கார்த்திக் மிக நன்றாக இருக்கிறார். இப்போதும் அவர் ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதன் மூலம், நவரச நாயகனின் உடல்நிலை குறித்துப் பரவி வந்த சர்ச்சைகளுக்கு கெளதம் கார்த்திக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விளக்கம் அவர்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்தது.
