மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம்வரும் பிருத்விராஜ், தற்போது அவரது சமீபத்திய படங்களுக்கு விமர்சனங்கள் குவிகிறது. கடந்த 2019-ல் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘லூசிபர்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ மார்ச் மாதம் வெளியானது, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

‘எம்புரான்’ படத்தில் 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறையை காட்சிப்படுத்தியதால், சில வலதுசாரி அமைப்புகள், குறிப்பாக இந்து அமைப்புகள், விமர்சனம் செய்யவும் எதிர்ப்புத் தெரிவித்தும் இருந்தன. இதனிடையே, மலையாள ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை மல்லிகா சுகுமாரன், “பிருத்விராஜை குறிவைத்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இது அவரை சினிமா தொழிலில் இருந்து நீக்க திட்டமிட்ட முயற்சி” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயன் நம்பியார் இயக்கிய பிருத்விராஜின் சமீபத்திய திரைப்படமான ‘விலாயத் புத்தா’ கடந்த நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, ஒரு குழு பிருத்விராஜை தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியிலும் அவமானப்படுத்த முயற்சித்து வருவதாகவும், அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

‘விலாயத் புத்தா’ மலையாள நாவலைத் தழுவி சந்தன மரகடத்தல் சம்பவங்களைப் பற்றிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படத்தின் காட்சிகளை தவறாக சித்தரித்ததாகவும், வகுப்புவாத பதட்டங்களை தூண்டும் நோக்கில் அவற்றை திருத்தி கூறியதாகவும் படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்ததால், யூடியூப் சேனலுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.