மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு’ (USS Gerald R. Ford) விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவுக்கு ஆதரவாகச் செயல்படும் தளவாட மற்றும் சேவை மையங்கள் ‘சட்டபூர்வமான ராணுவ இலக்குகளாகக்’ கருதப்படும் என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து ஈரான் அரசு ஊடகமான ‘பிரஸ் டிவி’ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவுக்குத் தேவையான எரிபொருள், பராமரிப்பு மற்றும் இதர சேவைகளை வழங்கும் மையங்கள் அனைத்தும், அந்தப் போர்க்கப்பலின் செயல்பாட்டு வலைப்பின்னலின் ஒரு பகுதியாகவே ஈரான் கருதுகிறது. எனவே, போர்ச் சூழலில் இந்த மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தற்காப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் இரு தரப்பும் மாறி மாறித் தாக்கிக் கொள்வதால் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கோடும், அந்நாட்டை எச்சரிக்கும் விதமாகவுமே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.

உலகின் மிக நவீன போர்க்கப்பல்களில் ஒன்றான ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு’, வழிகாட்டி ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுடன் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. ஈரானின் இந்த எச்சரிக்கையால், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல் வழித்தடங்களில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயன்றபோதிலும், இரு நாடுகளும் தங்கள் பிடியில் உறுதியாக இருப்பதால் பதற்றம் தணியவில்லை. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.