ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், இந்தப் போரை நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்ற குழப்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளின் தலைவர்களுடன் ட்ரம்ப் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானுக்கு எதிராக இன்னும் கடுமையான மற்றும் தீவிரமான தாக்குதல்களை நடத்துமாறு ட்ரம்ப்பிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சவுதிக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலப் பகை நிலவி வரும் நிலையில், “பாம்பின் தலையைத் துண்டித்து எறியுங்கள்” என்ற முந்தைய சவுதி மன்னரின் பாணியிலேயே தற்போதைய இளவரசரும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இந்தப் போர் இன்னும் 4 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், ட்ரம்ப் சீனா செல்வதற்கு முன்பே இன்னும் சில அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.