மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் தங்களது சொத்துக்களையும் பணத்தையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர்.

உலகளவில் இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் முதலீட்டிற்குப் பெயர்பெற்றவை என்றாலும், தற்போதைய அசாதாரணமான சூழலில் பெரும் முதலீட்டாளர்கள் மீண்டும் சுவிட்சர்லாந்தை நோக்கித் திரும்பியுள்ளனர்.

போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால், பல பில்லியன் டாலர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளுக்கு மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து சுவிட்சர்லாந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தின் அளவு சுமார் 40% அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் வலுவான சட்ட அமைப்பே, கோடீஸ்வரர்கள் தங்களது பணத்தைப் பாதுகாக்க அந்த நாட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணமாக உள்ளது.

தற்போது நிலவும் புவிசார் அரசியல் சூழலில், பல கோடீஸ்வரர்கள் முதலில் தங்களது ரொக்கப் பணத்தையும், பின்னர் பங்குகள் மற்றும் பத்திரங்களையும் சுவிஸ் வங்கிகளுக்கு மாற்றத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.