இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஜுவாலா குட்டா, தான் தாயான முதல் ஆண்டில் ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். கடந்த 2025 ஏப்ரலில் இவருக்கும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பெண் குழந்தை பிறந்த நிலையில், இந்த ஓராண்டு காலத்தில் அவர் இந்த நெகிழ்ச்சியான காரியத்தைச் செய்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், முறையாகப் பேக் செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட தாய்ப்பால் பைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கியுள்ளார்.
மேலும் வெறும் 100 மில்லி தாய்ப்பால், ஒரு கிலோ எடையுள்ள சிறிய குழந்தைக்குப் பல நாட்களுக்கு உணவாக உதவும் என்றும், இதன் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள பல குழந்தைகளுக்கு மருத்துவக் குறைபாடுகள், குறைப்பிரசவம் அல்லது தாயின் உடல்நலக் குறைவு காரணமாகத் தாய்ப்பால் உடனடியாகக் கிடைப்பதில்லை என்று ஜுவாலா குட்டா சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய குழந்தைகளுக்குத் தானமாக வழங்கப்படும் தாய்ப்பால் நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதுகாக்கிறது.
