டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மோசின் நக்வியை முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாகச் சாடியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு  அளித்த பேட்டியில் தனது கோபத்தை  வெளிப்படுத்திய அக்தர் கூறியதாவது:

“கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு நபர் (மோசின் நக்வி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அமர்ந்தால், அணியின் நிலைமை இப்படித்தான் இருக்கும். தகுதியற்ற மற்றும் விவரம் தெரியாத ஒருவரிடம் பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய குற்றமாகும். ஒரு போட்டியில் கூட வெற்றியைத் தேடித்தர முடியாத ஒரு வீரரை (பாபர் அசாம்) நீங்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கி வைத்துள்ளீர்கள். நிர்வாகமே சரியாக இல்லாதபோது அணி எப்படிச் சிறப்பாகச் செயல்படும்?” என அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் (40 பந்துகளில் 77 ரன்கள்) 175 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 18 ஓவர்களிலேயே பாகிஸ்தான் சரணடைந்ததால், இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து, ‘சூப்பர்-8’ சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 9 போட்டிகளில் இந்தியா 8 வெற்றிகளைப் பெற்றுத் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.