இந்தியாவிடம் அடைந்த படுதோல்வியால் துவண்டுவிடாமல், அடுத்த கட்டத்திற்கு முன்னேற வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் அறிவுறுத்தியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி அந்த அணியின் ‘சூப்பர்-8’ வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களால் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க முடியும். பெரிய போட்டிகளில் ஏற்படும் அழுத்தத்தை கையாள்வதில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். அழுத்தம் கூடும்போது வீரர்கள் தங்கள் அடிப்படை ஆட்டத் திறனை மறந்து சிதறிவிடுகின்றனர். சர்வதேச வீரர்களாகிய நீங்கள், நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.”
“தொடர் இன்னும் முடிந்துவிடவில்லை. கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். நமது பலத்தை மீண்டும் ஒருங்கிணைத்து, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் நல்ல நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தியாவிடம் தோற்றதை விரைவாக மறந்துவிட்டு, அடுத்த சவாலுக்குத் தயாராவதே இப்போது முக்கியம் என்றார்.
பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில், பந்துவீச்சில் ஓரளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியாவை 175 ரன்களுக்குள் தடுத்து நிறுத்திய போதிலும், பேட்டிங்கின் போது பவர்பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததுதான் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என ஹெசன் சுட்டிக்காட்டினார்.
