டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் பகிர்ந்த கிண்டல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் வசீம் ஜாஃபர், பாகிஸ்தானின் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் புகழ்பெற்ற ‘தாமினி’ படக் காட்சியைப் பகிர்ந்துள்ளார். அதில், “தாரிக்கு மேல் தாரிக்கு (தேதிக்கு மேல் தேதி) கிடைக்கிறது, ஆனால் நீதி கிடைக்கவில்லை” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்பதைச் சுட்டிக்காட்டி அவர் செய்த இந்தப் பதிவு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணியின் செயல்பாட்டைக் கண்டு மிகுந்த விரக்தியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ள சில கருத்துக்கள்: “இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே பாகிஸ்தான் வீரர்கள் மனதளவில் தளர்ந்து விடுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லாமல் அவர்கள் மைதானத்திற்குள் நுழைகின்றனர்.
Pak fans after suffering yet another embarrassing defeat to India 😅 #INDvPAK #T20WorldCup pic.twitter.com/tlzqm0n2NE
— Wasim Jaffer (@WasimJaffer14) February 15, 2026
“நிச்சயமாக இந்தியா மற்ற அணிகளை விடப் பல மைல்கள் முன்னால் இருக்கிறது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை, இப்போது உலகக் கோப்பை எனத் தொடர்ந்து இந்தியாவால் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம்.” “அணிக்கு மன உறுதி மிக அவசியம். இந்தியாவுக்கு எதிராக இது தொடர்ந்தால் அது வருங்காலத்திற்கு மிகவும் ஆபத்தானது.”
பேட்டிங்கில் இந்திய அணி 9 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தபோது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சாய்ம் அய்யூப் அபாரமாகச் செயல்பட்டார். அவர் இஷான் கிஷனை வீழ்த்தியதோடு, அதன்பின் ஒரே ஓவரில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து இந்தியாவிற்குப் பெரும் நெருக்கடி கொடுத்தார். இருப்பினும், இந்தியா 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.
176 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா அதிர்ச்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஜஸ்பிரித் பும்ரா தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் சாய்ம் அய்யூப் மற்றும் கேப்டன் சல்மான் ஆகாவை வெளியேற்றினார். அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் திலக் வர்மா ஆகியோரின் சுழல் கூட்டணியால் பாகிஸ்தான் 114 ரன்களுக்குச் சுருண்டது.
