டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் மேலாண்மை மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் யுக்திகளை ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தியா பெற்ற மெகா வெற்றிக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. லலித் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில், “இந்திய அணியின் அபாரமான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் சிறப்பான மேலாண்மைத் திறனுக்குப் பாராட்டுகள்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த கௌதம் கம்பீர், “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
Thanks a lot for your wishes!
— Gautam Gambhir (@GautamGambhir) February 15, 2026
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளமாக இருந்தபோதிலும், முதல் ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்த கம்பீர் மற்றும் சூர்யகுமாரின் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த முடிவைச் சரி என்று நிரூபிக்கும் வகையில், பாண்டியா தனது முதல் ஓவரிலேயே சாகிப்ஸாதா பர்ஹானை வெளியேற்றி பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தார். இந்தச் சரியான திட்டமிடலே இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் விளாசி ‘ஆட்ட நாயகன்’ விருதைத் தட்டிச் சென்றார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து உறுதுணையாக இருந்தார்.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் (44), ஷாகீன் அப்ரிடி (23) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
