நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி. செல்வகுமார், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார். சுமார் 27 ஆண்டுகள் விஜய்யுடன் பணியாற்றிய இவர், சமீப காலமாக விஜய்யைப் பற்றி விமர்சனங்களை முன்வைத்து பேசி வந்தார்.
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் தனது உழைப்பும், பங்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், அவர் தனது கலப்பை மக்கள் இயக்கத்தையும் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
தி.மு.க.வில் இணைந்த பிறகு பேசிய பி.டி. செல்வகுமார், தனது முடிவிற்கான காரணத்தைத் தெரிவித்தார். தான் நீண்டகாலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கியமாக இருந்தும், புதிதாக ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ (த.வெ.க) வந்தவர்கள் தங்கள் பங்களிப்பை ஏற்கவில்லை என்றும், அங்கீகரிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
த.வெ.க.வில் ஆரம்பகால ரசிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தி.மு.க.வின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தன்னை ஈர்த்ததால் அதில் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
