தனியார் விருது விழா ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கம் அளித்து இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விழாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, த்ரிஷாவின் புகைப்படம் திரையில் வந்ததாகவும், அப்போது ரசிகர்கள் ‘குந்தவை’ என்று கத்தினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சூழலில் ஜாலியாகப் பேச நினைத்து, ‘குந்தவையை வீட்டில் குந்த வைக்கவும்’ என்று கூறியதாகவும், அது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்படவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேடையை விட்டு இறங்கியதும் ரங்கராஜ் பாண்டே த்ரிஷா குறித்த அந்தப் பேச்சைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியதாகவும், உடனே தான் அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார். ஆனாலும் யாரோ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அதற்குத் தனது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். தான் எப்போதுமே பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுபவன் என்றும், ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் என்றும் அந்தப் பதிவில் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
