அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு எதிராகக் கொடூரமான இனவெறித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டின் முன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குழுவொன்று தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

அந்தக் குழுவினர், சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் சைக்கிள் சக்கரத்தால் காயம் ஏற்படுத்தியதுடன், முகத்தில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், “இந்தியாவுக்குத் திரும்புங்கள்” என்று கூறி அவளைக் கேலி செய்ததாகவும், இனவெறி கருத்துகளை முன்வைத்ததாகவும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாய், ஐரிஷ் மிரர் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், “அவளால் பேச முடியவில்லை. பயத்தில் நடுங்கி, அழ ஆரம்பித்தாள்” என கூறியுள்ளார். தானும் தனது குடும்பமும் கடந்த 8 ஆண்டுகளாக அயர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், தற்போதைய தாக்குதலுக்குப் பிறகு மகள் வெளியே விளையாடவே பயப்படுகிறாள் என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். வாட்டர்ஃபோர்டின் கில்பாரி பகுதிக்கு அவர்கள் கடந்த ஜனவரியில் மட்டுமே குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த சம்பவம், அயர்லாந்தில் இந்தியர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இனவெறித் தாக்குதல்களில் சமீபத்தியதாகும். கடந்த மாதம் டப்ளின் புறநகரில் 40 வயதான ஒரு இந்தியர், சிறுவர்கள் குழுவால் தாக்கப்பட்டதும், அவரின் ஆடைகள் கிழிக்கப்படுவதும் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

தற்போது, இந்தச் சிறுமியின் தாய் GARDA (அயர்லாந்து காவல்துறை)யிடம் புகார் அளித்துள்ளதுடன், குற்றவாளிகளுக்கு ஆலோசனை அளிக்கவேண்டுமே தவிர, தண்டனை வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியர்கள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள், அயல்நாட்டில் வாழும் இந்திய சமூகத்தில் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.