முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே ‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் கூறிவந்த நிலையில், தற்போது ‘மாசி’ மாதம் பிறந்துவிட்டதே எனக் கேட்டதற்கு, “பொறுமையாக இருங்கள்” என்று மட்டும் பதிலளித்தார்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, “அப்படியா?” என்று சுருக்கமாகக் கூறிவிட்டுச் சென்றார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசிய அவர், பட்ஜெட் வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என்றார்.

கோடைக்கால நிதியாக மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, “மகளிருக்கு 5,000 ரூபாய் கொடுத்ததை வரவேற்கிறோம்; இதற்கு மாறாக ஏதேனும் கருத்துச் சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.