தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில், ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தும் பல தேர்வர்களின் பதிவு எண்கள் பட்டியலில் இல்லாததால் பெரும் குழப்பம் நிலவியது. இதனால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிர்வாகக் குளறுபடியால் தேர்வாணையக் கட்டுப்பாட்டாளர் சண்முக சுந்தரம் மாற்றப்பட்டு, புதிய கட்டுப்பாட்டாளராக வெங்கடா பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ரத்து செய்யப்பட்ட இந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்று காலையில் பொது அறிவுத் தாளும், மதிய அமர்வில் தமிழ் தகுதித் தாளும் நடைபெறும்.

இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் தங்களது OTR எண்ணைப் பயன்படுத்தி அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.

இதற்கிடையில், பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறவிருந்த தொகுதி-II (குரூப் 2) முதன்மைத் தேர்வு எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்படும்.

சுமார் 4.18 லட்சம் பேர் எழுதிய முதல்நிலைத் தேர்வின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த முதன்மைத் தேர்வுகள், 828 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.