2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் தாரக மந்திரமான “விசில் போடு” கலாச்சாரம் நிறைந்த சேப்பாக்கத்தில், இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதங்களை அனல் பறக்க வைத்தது.

இந்தத் தடை குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA), இது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்த தடை அல்ல என்றும், சென்னை காவல்துறையினரால் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்துள்ளது. ​இதற்கிடையே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் சின்னமாக ‘விசில்’ அண்மையில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் காரணங்களுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தவெக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். “விளையாட்டு மைதானத்தில் மக்களின் கொண்டாட்ட உரிமையை அரசு பறிக்கிறது” எனத் தவெக ஐடி விங் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஆனால், மற்ற மைதானங்களிலும் வுவுஸேலா (Vuvuzelas) மற்றும் ஹார்ன்கள் போன்ற அதிக சத்தம் எழுப்பும் பொருட்களுக்கு ஐசிசி பொதுவாகத் தடை விதிப்பது வழக்கம் என்றும் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியோ, அடுத்தடுத்து சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கும் விசில் கொண்டு செல்ல அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்னை ரசிகர்கள் இந்த உலகக்கோப்பையில் “விசில்” இல்லாமலேயே போட்டிகளைக் கண்டு ரசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.