முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, சசிகலா புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை நடத்த சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த மேடையில் தனது புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிக்கட்சி தொடங்கி அரசியலில் தனது பலத்தை நிரூபிக்க சசிகலா விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும், வரும் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக-வில் இணைய சசிகலா தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தற்போது புதிய கட்சி என்ற முடிவை நோக்கி அவர் நகர்வதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனால் தென் தமிழகத்தில் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.