தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சித் தாவல் படலங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சேலத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக மற்றும் தவெக-வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார்.

திமுகவின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட நிர்வாகிகளிடம், தேர்தல் பணிகளில் தொய்வின்றி தீவிரமாக ஈடுபடுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் மாவட்ட அளவில் நடைபெறும் இந்த கட்சி மாற்றம், வரும் நாட்களில் சேலம் மாவட்ட அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.