முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாதிரிப்பள்ளி மைதானத்தில் ‘முதல்வர் கோப்பை’ என்ற பெயரில் கபடி போட்டிகள் நடைபெற்றன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கடந்த 5-ஆம் தேதி இந்தத் தொடர் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் இறுதிப்போட்டிகள் நேற்று (பிப். 7) நடைபெற்றன.

இந்த விளையாட்டுத் திருவிழாவில் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் வடிவேலு மற்றும் நடிகை தேவயானி ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குக் கோப்பைகளை வழங்கிக் கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை தேவயானி, “விளையாட்டில் ஈடுபடும் அனைத்து பெண்களும் ‘சிங்கப்பெண்களே’. வெற்றி பெறுவதை விட, போட்டிகளில் பங்கேற்பதே மிக முக்கியமானது. மாணவிகளை ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு, “இந்தக் கபடிப் போட்டியைப் பார்க்கும்போது மதுரை சித்திரைத் திருவிழாவைப் பார்ப்பது போன்ற பிரம்மாண்டமாக உள்ளது. ஜல்லிக்கட்டில் வீரர்கள் காளைகளை அடக்குவது போல, கபடி மைதானத்தில் வீராங்கனைகள் சீறிப் பாய்ந்து விளையாடுகின்றனர்,” என்று பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அரசியல் ரீதியாகப் பேசிய அவர், “இந்த ‘முதல்வர் கோப்பை’ என்பது வெறும் விளையாட்டுக்கான கோப்பை மட்டுமல்ல; இது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெறப்போகும் வெற்றிக்கான முன்னோட்டம். வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது நிச்சயம், அதற்கு மேல் வெற்றி பெறுவது லட்சியம். பெண்களுக்குச் சிறந்த திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இந்த அரசுக்குத் தோல்வியே கிடையாது,” என்று நம்பிக்கையுடன் பேசினார்.