மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேசத்தந்தை காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசு, விரைவில் ரூபாய் நோட்டில் உள்ள அவரது படத்தையும் நீக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.க அரசுக்கு எதிராக, காந்தியின் பெயரை மீண்டும் வைக்கும் வரை நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்திருப்பதையும், தமிழக மக்களின் வரிப்பணத்தை பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மடைமாற்றுவதையும் அவர் கடுமையாகச் சாடினார்.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவதால், வரும் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியை மக்கள் முற்றிலும் புறக்கணிப்பார்கள் என்றும், திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கிய இந்த எழுச்சி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதில் முடியும் என்றும் அவர் பேசினார்.
தி.மு.க கூட்டணியில் எவ்விதப் பிணக்கும் இன்றி சுமூகமாக இருப்பதாகவும், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தங்களது விருப்பம் என்றும், அதை நிறைவேற்றும் வகையில் தி.மு.க தலைமைக்கு பெரிய மனம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமரை எம்.பி.க்கள் தாக்க முயன்றதாகக் கூறப்படும் புகாரை மறுத்த அவர், இது போன்ற தேவையற்ற கருத்துக்களை ஒரு பிரதமர் பேசுவது நாட்டு மக்களுக்கே ஆச்சரியமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
