நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசின் உள்நோக்கத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், தென் மாநிலங்கள் மற்றும் OBC, SC மக்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கவே பாஜக இந்த மசோதாவைக் கொண்டு வரத் துடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்றி, குறிப்பிட்ட சில பிரிவினரின் அதிகாரத்தை ஒடுக்க நடக்கும் இந்த முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் ஆவேசமாக முழங்கினார்.
தென் மாநில மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி, “தென் மாநிலங்களே கவலை வேண்டாம், இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா ஒருபோதும் நிறைவேறாது” என அதிரடி உறுதி அளித்தார். பாஜகவின் இந்த அரசியல் சதுரங்கத்தை முறியடிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தென்னகத்தின் உரிமைகளுக்காக ராகுல் காந்தி லோக்சபாவில் விடுத்த இந்த அதிரடி அறிக்கை, தற்போது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
