பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டு, பின்னர் திருமணம் செய்துகொண்ட நபர்கள் மீதான போக்சோ (POCSO) சட்ட வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் சம்மதத்தின் பேரில் உறவு கொண்டாலும், சட்டப்படி அது குற்றம் என்பதால் அத்தகைய வழக்குகளை ரத்து செய்யும்போது நீதிமன்றங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என நீதிபதி அனூப் ஜெயராம் பம்பானி எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண் “எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று கூறும்போது, அவர் யாராவது மிரட்டியோ அல்லது கட்டாயப்படுத்தியோ அப்படிச் சொல்கிறாரா? என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இருவரும் நீண்ட காலமாக குடும்பமாக வாழ்கிறார்களா, அவர்களுக்குக் குழந்தைகள் உள்ளனவா, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை வன்கொடுமை செய்தாரா மற்றும் இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் எவ்வளவு போன்ற 4 முக்கிய அம்சங்களை ஆய்வு செய்த பிறகே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

வெறும் சட்டப் பிடியில் இருந்து தப்பிக்கச் செய்யப்படும் போலித் திருமணங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மையான விருப்பத்தை அறிய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.