தெலுங்கானா மாநிலம் புவனகிரி அருகே உள்ள அனுமாபுரம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு வயதுக் குழந்தையை அதன் தந்தையே மூச்சடைக்கச் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி தம்பதியான ஸ்ரீராமுலு மற்றும் நாகமணிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் நாகமணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்புதான் தனது மனைவியைச் சமாதானம் செய்து ஸ்ரீராமுலு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். இந்நிலையில், நாகமணியின் தந்தை மல்லையா தனது மகளைப் பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். தாத்தாவைக் கண்டதும் குழந்தை நித்யஸ்ரீ ஓடிச் சென்றுள்ளது.

இதைப் பார்த்த ஸ்ரீராமுலு, தனது மனைவி மீண்டும் தந்தையுடன் வீட்டை விட்டுச் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில், குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றார். அப்போது குழந்தை வீறிட்டு அழவே, அதன் அழுகையை நிறுத்த ஸ்ரீராமுலு குழந்தையின் வாயையும் மூக்கையும் சேர்த்துப் பொத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமுலுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.