மனைவியைப் பராமரிப்பது ஒரு கணவனின் முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமையாகும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜீவனாம்சம் என்பது ஏதோ பெயரளவில் வழங்கப்படும் ஒரு விஷயமாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு பெண் திருமண உறவில் இருந்தபோது எந்தவிதமான வாழ்க்கைத்தரத்தை அனுபவித்தாரோ, அதே தரம் மற்றும் கண்ணியத்துடன் அவர் வாழ்வதை உறுதி செய்வது கணவனின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு இடையேயான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்புத் தொகையை 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது. இந்த வழக்கில், திருமணமான ஓராண்டிற்குள்ளேயே கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக அந்தப் பெண் பிரிந்து வாழ நேரிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பராமரிப்புத் தொகை என்பது மனைவியின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமாக இருக்க வேண்டும்.

அதே சமயம் அது கணவனுக்கு மிதமிஞ்சிய சுமையை ஏற்படுத்தாத வகையில் சமநிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறினர். ஒரு கணவன் தனது மனைவியை மரியாதையுடனும், கௌரவத்துடனும் பராமரிப்பது சட்ட ரீதியான கடமை மட்டுமல்லாது, அது ஒரு சமூகப் பொறுப்பும் கூட என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.