அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபிரிஸ்கோ (Frisco) பகுதியில் வசிக்கும் அமெரிக்கர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினர் குறித்து ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகார் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவிட்டு, அதிகாலை 3 மணிக்குத் தூங்கச் செல்லும் அந்த நபர், சரியாக 5 மணிக்கே பக்கத்து வீட்டு இந்தியக் குடும்பத்தினர் எழுந்து வாசலைச் சுத்தம் செய்வது, தண்ணீரை ஊற்றி வாசல் தெளிப்பது மற்றும் கோலம் (Rangoli) போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தனது தூக்கம் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Indian neighbors are making American lose his mind in Frisco, Texas pic.twitter.com/Og9rh8pQSd
— CyberGreen09 (@CyberGreen09) April 20, 2026
இது குறித்து அந்த இந்தியக் குடும்பத்திடம் அவர் முறையிட்டபோது, “இது எங்கள் கலாச்சாரம் மற்றும் தினசரி நடைமுறை” என அவர்கள் அமைதியாகப் பதிலளித்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் சத்தக் கட்டுப்பாடு விதிகளின்படி (Noise Ordinance), அதிகாலை நேரங்களில் சத்தம் போடுவது சட்டப்படி குற்றம் எனப் பலரும் அந்த அமெரிக்கருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்தப் பதிவு இந்தியர்களுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் இனவாதப் பரப்புரை என மற்றொரு தரப்பினர் சாடி வருகின்றனர். ஒரு சிறிய பக்கத்து வீட்டுத் தகராறு, இப்போது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் குடியேற்றம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் குறித்த பெரும் விவாதமாக மாறியுள்ளது.
