பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“30 ஆண்டுகளாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே. மணியை அவமானப்படுத்துவதை என்னால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவருக்கு செய்யப்பட்ட அவமதிப்பு கட்சியின் தொண்டர்களையும் வேதனைப்படுத்தியுள்ளது” என்றார். வரும் தேர்தல் குறித்து பேசிய ராமதாஸ்,
“இந்த தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அந்த கூட்டணி நல்ல முடிவை தரும். கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை. நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் தொடர்பாக பேசிய அவர், “என்னைப் போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்? அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடமெல்லாம் மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்” என்றார்.
மேலும், “நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன். அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என கடுமையாகக் கூறினார்.
தனது அரசியல் பயணம் குறித்து பேசிய ராமதாஸ், நான் நினைத்திருந்தால், இந்திய அளவில் எந்த பதவியிலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை நான் செய்யவில்லை. ‘பதவிக்கு வரமாட்டேன்’ என்ற எனது சத்தியத்தால்தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்” என்று தெரிவித்தார்.
தனிப்பட்ட மனநிலை குறித்து உருக்கமாக பேசிய அவர், “அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டாலும் கூட தூக்கம் வருவதில்லை” என கூறி கூட்டத்தில் உணர்ச்சி வெளிப்பாட்டை ஏற்படுத்தினார்.
மேலும், “தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை சந்திக்க வரும் பா.ம.க. தொண்டர்களை நினைத்தாலே புத்துணர்ச்சி கிடைக்கிறது” என அவர் குறிப்பிட்டார்.
