பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே தரம் குறைந்த சீருடைகளால் பந்து நிறம் மாறிய விவகாரம், உலக அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் இடையிலான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய 5 ஓவர்களிலேயே வெள்ளை நிறப் பந்து இளஞ்சிவப்பு (Pink) நிறத்திற்கு மாறியது. ஹைதராபாத் அணி வீரர்கள் பந்தைப் பளபளப்பாக்கத் தங்கள் பேண்ட்டில் தேய்த்தபோது, சீருடையின் சாயம் பந்தில் ஒட்டிக்கொண்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த வினோதச் சம்பவம் குறித்துப் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் நகைச்சுவையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “பாகிஸ்தானின் ஒவ்வொரு நகரத்திலும் துப்பட்டாக்களுக்குச் சாயம் பூசும் ‘துப்பட்டா கலி’ (Dupatta Gali) வீதிகள் உண்டு. வீரர்களின் சீருடைகள் அங்கிருந்துதான் வந்திருக்கும் போலிருக்கிறது. முதலில் கேமரா கோளாறு என்று நினைத்தேன், பிறகுதான் தெரிந்தது இது சீருடையின் சாயம் என்று,” என வாரியத்தைக் கிண்டல் செய்துள்ளார்.

ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்னஸ் லபுஷேன் இது குறித்துப் பேசுகையில், “எனது நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில் சீருடைச் சாயம் பந்தில் ஒட்டுவதை நான் பார்த்ததே இல்லை. இரண்டாவது ஓவரிலேயே நடுவரிடம் இது குறித்துக் கேட்டேன். பேட்டில் பட்டு சாயம் ஒட்டுவதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் துணியிலிருந்து சாயம் மாறுவது இதுவே முதல்முறை,” எனத் தெரிவித்தார்.

இத்தனை குளறுபடிகளுக்கு மத்தியிலும் லாகூர் கலாண்டர்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 53 ரன்களும், ஹசிபுல்லா கான் 40 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி, லாகூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 130 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் லாகூர் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லாகூர் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.